ஆழம் அறியாமல் காலை விடாதே
தொலைவில் ஒரு நாட்டில் ஒரு அழகிய குளம் இருந்தது. அதில் பூக்கள் மற்றும் அனைத்து வகையான உயிரினங்களும் இருந்தன. அன்னப்பறவைகள், வாத்துகள், தவளைகள் மற்றும் மீன்கள் இருந்தன. அவைகள் அங்கு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.
அப்போது நிலத்தில் வறட்சி ஏற்பட்டது. எல்லாம் வரண்டுப் போனது. நீரின்றி மரங்கள் சாய்ந்தன. வானம் ஒரு மழைமேகம் கூட இல்லாமல் பிரகாசமான நீல நிறமாக காட்சியளித்தது.
குளம் கொஞ்சம் கொஞ்சமாக நீரினை இழக்கத் தொடங்கியது. குளத்தில் இருந்த அனைத்து விலங்குகளும் கவலையடைந்தன. அன்னப்பறவைகள் நல்லக் குளத்தைக் கண்டுபிடிக்க பறந்தன. அருகில் ஓடை இருக்கிறதா என்று பார்க்க வாத்துகள் தத்தளித்து சென்றன. மீன்கள் மிகவும் பயந்தன, ஏனென்றால் அவைகள் தற்போது வேறு இடம் தேடி செல்ல வேண்டும். எனவே, தாம் விரைவில் இறந்துவிடுவோம் என நினைத்தன.
அந்த குளத்தில் இரண்டு தவளைகள் வசித்து வந்தன.
“நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று இளைய தவளை கேட்டது.
“நாம் போய் தண்ணீரைத் தேட வேண்டும். அல்லது இறந்துவிடுவோம்” என்றது மூத்த தவளை.
இதனால் அவைகள் குளத்தில் இருந்து குதித்து தண்ணீர் தேடி சென்றன. சிறிது நேரம் கழித்து, அவைகள் ஒரு பழைய கிணற்றைக் கண்டுபிடித்தன. கிணற்றின் விளிம்பில் குதித்து உள்ளே பார்த்தன.
அவைகளால் அங்கே புதிய சுத்தமான தண்ணீரை பார்க்க முடிந்தது.
மகிழ்ச்சியுடன் குதித்து அவைகளுடைய தண்ணீரின் பங்கினை அருந்தின. அது ஒரு ஆழமான குளிர் கிணறு.
“நாம் இங்கேயே காத்திருப்போம், இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டியதில்லை.” என்று இளைய தவளை மகிழ்ச்சியுடன் கூறியது
ஆனால் மூத்த தவளை புத்திகூர்மைமிக்கது. வானத்தைப் பார்த்தது. கிணற்றில் இருந்த தண்ணீரைப் பார்த்தது. தண்ணீரிலிருந்து கிணற்றின் உச்சிக்கு வெகு தொலைவில் இருப்பதை அது கவனித்தது.
“வானத்தை பார். மழைக்கான அறிகுறியே தென்படவில்லை. பிரகாசமான நீல நிறமாக காட்சியளிக்கின்றது. இந்த கிணற்றில் இருந்து நாம் விரைவில் வெளியேற வேண்டும் என்று கூறியது.
“ஏன்?” என்றது இளம் தவளை. “இங்கு நன்றாக தானே இருக்கின்றது. தண்ணீர் இருக்கின்றது. சும்மா இங்கேயே இருப்போம் என்றது .”
“வறட்சி தொடர்ந்தால், இந்த தண்ணீர் குறைந்து கொண்டே போகும். அப்போது தண்ணீருக்கும் அளவிற்கும் கிணற்றின் மேற்பகுதிக்கும் இடையே உள்ள தூரம் நாம் குதிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும்” என்றது மூத்த தவளை
“அப்படியானால் நாம் இங்கே மாட்டிக் கொள்வோமா?” என்று கேட்டது இளம் தவளை.
“ஆம், எந்த வழியும் இல்லாமல் நாம் சாக வேண்டியிருக்கும். அதனால்தான் ஆழம் அறியாமல் காலை விடாதே என்பார்கள். நீங்கள் ஒரு செயலைச் செய்யும்முன் எப்பொழுதும் வெகுதூரம் பார்க்க வேண்டும். நிகழ்காலத்தைப் பற்றி மட்டும் சிந்தித்து செயற்பட கூடாது.
இளைய தவளை புரிந்து கொண்டது. அவைகள் இரண்டும் முடியும் வரை முயற்சி செய்து கிணற்றில் இருந்து குதித்து வெளியே சென்றன.