கோல்டிலாக்சும் மூன்று கரடிகளும்

கோல்டிலாக்சும் மூன்று கரடிகளும்

img

ஒரு காலத்தில், தொலைவில் உள்ள ஒரு காட்டில், மூன்று கரடிகள் வாழ்ந்து வந்தன. நடுத்தர அளவிலான தாய் கரடியும், மிகவும் பெரிய தந்தை கரடியும், சிறிய கரடியும் இருந்தன. அவர்கள் காட்டில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர்.

ஒரு நாள், தாய் கரடி மற்றும் தந்தை கரடி இருவரும் கஞ்சி சமைத்தார்கள். அது மிகவும் சூடாக இருந்ததால், குளிர்மையடையும் வரை காட்டில் உலா செல்ல முடிவு செய்தனர். அவர்கள் வீட்டின் கதவை மூடிவிட்டு வெளியே சென்றனர்.

ஒரு சிறுமியும் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அவளுக்கு நீண்ட தங்க சுருட்டை முடி இருந்தது. எனவே மக்கள் அவளை கோல்டிலாக்ஸ் என்று அழைத்தனர். அவள் அழகிய சிறிய வீடொன்றைப் பார்த்தவள் உள்ளே செல்ல விரும்பினாள். அவள் மிகவும் மரியாதையான சிறுமி இல்லாததாலும், அனுமதியின்றி வேறொருவரின் வீட்டிற்குள் நுழைவதைப் பொருட்படுத்தாததாலும், கதவைத் திறந்து உள்ளே நடந்தாள்.

அவள் மேசையில் மூன்று கிண்ணங்களில் கஞ்சி இருப்பதைப் பார்த்தாள், ஒன்று பெரியது, ஒரு நடுத்தர அளவு மற்றும் சிறியது. அவள் பசியாக இருப்பதை உணர்ந்தாள். எனவே அவள் மிகப்பெரிய கிண்ணத்தில் உள்ள கஞ்சியைச் சுவைத்தாள். அது மிகவும் சூடாக இருந்தது. அவள் நடுத்தர அளவிலான கிண்ணத்தில் இருந்த கஞ்சியைச் சுவைத்தாள். அது மிகவும் குளிர்மையாக இருந்தது. அவள் சிறிய கிண்ணத்தில் உள்ளதை சுவைத்தாள். அது சரியாக இருந்தது. ம்ம்ம்ம்ம் மிகச்சிறிய பாத்திரத்திலிருந்த கஞ்சியை எல்லாம் முடித்தாள்.

பிறகு அவள் பொது அறைக்கு சென்றாள். மூன்று நாற்காலிகளைப் பார்த்தாள். அவள் சோர்வாக உணர்ந்தாள். மிகப் பெரிய நாற்காலியில் அமர்ந்தாள். அது மிகவும் கடினமாக இருந்தது. நடுத்தர அளவிலான நாற்காலியில் அமர்ந்தாள். அது மிகவும் மென்மையாக இருந்தது. மிகச்சிறிய நாற்காலியில் அமர்ந்தாள். அது சரியாக இருந்தது, மிகவும் கடினமாகவும் இல்லாமல், மிகவும் மென்மையாகவும் இல்லாமல் சரியானதாக இருந்தது. ஆனால் அவள் நாற்காலிக்கு மிகவும் கனமாக இருந்ததால், அது உடைந்துவிட்டது

பின்னர் கோல்டிலாக்ஸ் மாடிக்கு சென்றாள். அங்கே மூன்று கட்டில்களைப் பார்த்தாள். அவளுக்கு தூக்கம் வந்தது. பெரிய கட்டில் அவளுக்கு மிகவும் உயரமாக இருந்தது.

நடுத்தர அளவிலான கட்டில் அவளுக்கு மிகவும் தாழ்வாக இருந்தது. மிகச் சிறிய கட்டில் சரியாக இருந்தது. அவள் அதில் ஏறினாள். மிகவும் வசதியாக இருந்ததால் தூங்கிவிட்டாள்.

கரடிகள் தங்கள் நடைப்பயணத்திற்குப் பிறகு பசியுடன் வீடு திரும்பின. சமையலறைக்குச் சென்றன. “யாரோ என் கஞ்சியினை அருந்தியுள்ளனர்” தந்தை கரடி உறுமியது. “யாரோ என் கஞ்சியினை அருந்தியுள்ளனர்” என்று உறுமியது தாய் கரடி. “யாரோ என் கஞ்சியினை எடுத்து முழுமையாக – சாப்பிட்டுவிட்டார்கள்” என்று சிறிய கரடி அழுதது.

பின்னர் மண்டபத்திற்கு சென்றனர். “யாரோ என் நாற்காலியில் அமர்ந்துள்ளனர்” என்று உறுமியது தந்தை கரடி. “யாரோ என் நாற்காலியில் அமர்ந்துள்ளனர்,” தாய் கரடி உறுமியது. “யாரோ என் நாற்காலியில் அமர்ந்து அதனை உடைத்துவிட்டனர்,” சிறிய கரடி அழுதது.

பின்னர் அவர்கள் மேலே சென்றனர். “யாரோ என் கட்டிலில் தூங்கியுள்ளனர்,” தந்தை கரடி உறுமியது. “யாரோ என் கட்டிலில் தூங்கியுள்ளனர்,” தாய் கரடி உறுமியது. சிறிய கரடி தன் கட்டிலுக்கருகில் சென்றது. “யாரோ என் கட்டிலில் ஏறி இன்னும் அங்கேயே இருக்கிறார்,” என்று கத்தியது.

சத்தம் கேட்டு கோல்டிலாக்ஸ் எழுந்தாள். மூன்று கரடிகள் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தாள். அவள் துள்ளிக் குதித்து கீழே ஓடினாள். திறந்திருந்த ஜன்னல் வழியாக குதித்து ஓடினாள். அவள் நன்றியோ மன்னிப்போ எதுவும் சொல்லவில்லை. அவள் மிகவும் மரியாதையான பெண் இல்லை.